தமிழ் சினிமாவில் புதிய அலை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். இன்று அவர் தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் சில படங்கள் தோல்வியடைந்ததால் அவர் ஃபார்ம் அவுட் நிலையில் இருக்கிறார் என்றாலும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது.

பொறியியல் படித்த பிறகு அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற அவரது கனவு கலைந்தது. பல வேலைகளை முயன்றும் நிலைக்காததால், அவர் ஒரு தொழில் தொடங்கினார். அது கூட தோல்வியடைந்ததால் விரக்தியில் மூழ்கினார். பணம் சம்பாதிக்க ஆந்திரா சென்று கஞ்சா விற்பனை செய்ய முயன்றும் நஷ்டத்தை சந்தித்தார். திருப்பதியில் மொட்டை போட்டு திரும்பி வந்த அவர், நல்ல வழியும், கெட்ட வழியும் இரண்டுமே மூடப்பட்ட நிலையை அடைந்தார்.
அந்த சமயத்தில் ஒரு நாடகக் குழுவில் சிறிய வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தனது மிமிக்ரி திறமையால் கவனம் ஈர்த்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் அவரை உதவி இயக்குநராக அழைத்தார். ஒருமுறை நடிகராக முயற்சி செய்ததில் தோல்வி அடைந்தபோது, எஸ்.ஏ.சி. கொடுத்த அறை அவருக்கு இயக்குநர் பாதையில் செல்லும் சுட்டுக் காட்டானது. பவித்ரனின் உதவியாளராக பணியாற்றிய பிறகு, 1993ல் ஜென்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு காதலன், ஜீன்ஸ், இந்தியன் போன்ற படங்கள் அவரது பெயரை உயர்த்தின. ஜீன்ஸ் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளால் இந்திய சினிமாவுக்கு ஒரு பாடம் புகட்டினார். உலக ஏழு அதிசயங்களையும் திரையில் காட்சிப்படுத்திய முதல் தமிழ் படமாக அது அமைந்தது.
90களிலேயே தொழில்நுட்பத்தில் பிரமாண்ட பாய்ச்சல் செய்தவர் ஷங்கர். அப்போது இருந்த வசதியிலேயே ரோபோவை எடுக்க திட்டமிட்டிருந்தார். அவருடைய பெருமையை உணர்ந்த முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அவருடன் பணிபுரிய ஆசைப்பட்டனர்.
இன்றைக்கு அவர் பல கோடிகளின் அதிபதி. ஆனால் இந்த நிலைக்கு வர ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தவர். மூன்று படங்கள் தோல்வியடைந்ததால் விமர்சனங்கள் எழுந்தாலும், மீண்டும் கம்பேக் கொடுக்கக்கூடிய திறன் அவரிடம் உண்டு. ஏனெனில் தோல்வி அவருக்கு புதியதல்ல.
பிரமாண்டத்தை தமிழ் சினிமாவில் விதைத்தவரான ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.