‘மேக்ஸ்’ படத்தில் முக்கிய வேடத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹொரநாட், ஆடுகளம் நரேன், சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படம் நேற்று கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகிறது. முன்னதாக இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கிச்சா சுதீப், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவர் ரவி கொட்டாரக்கரா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சுதீப் பேசியதாவது:-
ஆரம்பிப்பதற்கு முன் தயாரிப்பாளர் தாணு சார், ‘தம்பி கதை கேளுங்க’னு சொன்னா, ‘டைரக்டரை வரச் சொல்லுங்க’னு சொன்னேன். இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் தோற்றத்தை பார்த்ததும் என் எண்ணம் உறுதியானது. ஆனால் அவர் கதை சொன்னார். அதைக் கேட்டதும், வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது என்பது புரிந்தது.
அவருடைய பார்வைதான் நான் இந்தப் படத்தில் நடித்ததற்குக் காரணம். தாணு சார் இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வந்துள்ளார். நான் அவரை வரவேற்கிறேன். அங்கேயே தொடர்ந்து படங்கள் பண்ணுங்க. ‘காக்க காக்க’ படம் வந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அந்த நேரத்தில், நான் வளர்ந்து கொண்டிருந்தேன். அந்தப் படத்தை கன்னடத்தில் எடுக்க அவரிடம் அனுமதி கேட்டேன். நான் யார் என்று தெரியாமல் உடனே எனக்கு எழுதிக் கொடுத்தார். பின்னாளில் என்னால் முடியவில்லை என்பது வேறு விஷயம். கேட்டு வாங்கி கொடுத்த தாணு சாரின் அந்த குணம் பெரிய விஷயம்” என்றார்.