சென்னை: எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாக நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்” என்று நடிகை கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஏபி குரூப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஃகேனம்’. இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் உதய் இயக்கியுள்ள இப்படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது, “4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடிகராக இல்லாமல் அதையும் கடந்து இந்த படத்தின் பணிகளில் அப்பா தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.
இப்படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடைபெறுகிறது. விபத்து – போர்- இழப்பு – என ஏராளமான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப் ஆக இருக்கிறது. நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்த படத்தில் சில கதாபாத்திரங்களுக்கு சில விஷயங்கள் நடக்கிறது. அந்த சூழலை அந்த கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? எப்படி கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். அதனால் இதனை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.
இப்படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன். அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ . சூப்பர் ஹீரோ அப்பா தான். இப்படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாக நடிக்க வராவிட்டால் கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்” என்றார்.