மும்பை: எமர்ஜென்சி படத்திற்கு சில வெட்டு… நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தின் புதிய படமான, ‘எமர்ஜென்சி’ திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மறுசீரமைப்புக் குழுவால், பரிந்துரைக்கப்படும் சில வெட்டுகளுடன் வெளியிடப்படும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வரலாற்றுத் தவறுகள் மற்றும் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக புகார்கள் எழுந்ததால் சிக்கலில் சிக்கியது. 1975ல் அப்போதைய பிரதமர் இந்திராவால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர், மஹிமா சவுத்ரி மற்றும் மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளை கட் செய்து வெளியிடலாம் என மத்திய தணிக்கை வாரியம் கோர்ட்டில் இன்று தெரிவித்தது. ரிவைசிங் கமிட்டி எனப்படும் மறுபரிசீலனை குழுவால் பரிந்துரைக்கப்படும் வெட்டுகளுடன் படத்தை வெளியிட அனுமதிப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.