சென்னை: தமிழக அரசு சார்பாக ‘தமிழ்நாடு கல்வியில் சிறந்தது’ நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில், ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது:- “நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்தான். பேருந்து பாஸ், முதல் தலைமுறை பட்டதாரி, உதவித்தொகை போன்ற சலுகைகளில் பொறியியல் முடித்த மாணவன். நான் ஒரு நடுத்தர வர்க்கம். நகரத்தில் நடுத்தர வர்க்கம் அல்ல. கிராமத்தில் நடுத்தர வர்க்கம். ஞாயிற்றுக்கிழமைகளில் இட்லி, கறி வாங்குபவர்கள் நாங்கள் அல்ல. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே அவற்றை வாங்குபவர்கள். எனவே அரசாங்கத்தின் இத்தகைய இலவசங்கள் எங்களுக்கு எவ்வளவு உதவின என்பதை உணர்ந்தேன்.

ஒருவேளை உணவின் மதிப்பு எனக்குத் தெரிந்திருக்கலாம். இன்று, 24 லட்சம் குழந்தைகள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் சாப்பிடுகிறார்கள். இதைக் கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பெரிய தொழிலதிபர்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் அரசாங்கத்தின் மத்தியில், சாதாரண மக்களின் குழந்தைகளின் கோரிக்கைகளுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்த அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சச்சின் டெண்டுல்கர் படித்தாரா? இளையராஜா படித்தாரா? ஏ.ஆர்.ரஹ்மான் படித்தாரா? பலர் கேட்கிறார்கள். கேட்பார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். சில நூறு பேர் மட்டுமே அப்படி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் கல்வி மூலம் வெற்றி பெற்றவர்கள் இங்கே பலர் உள்ளனர். நீங்களும் அதையே பின்பற்ற வேண்டும். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்களாக மாறுவதில்லை,” என்று தமிழரசன் பச்சமுத்து கூறினார்.