அஜித்தின் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்பதில் அஜித்தின் ரசிகர்களை அடித்துக்கொள்ள முடியாது. அந்த வகையில் இப்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். தியேட்டர்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுள் அஜித்தே…’ என்று கூச்சலிட்டு பார்வையாளர்களை ‘ஜர்க்’ ஆக்குகிறது புது ஸ்டைல்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பலரும் புலம்பி வருகின்றனர். ‘விடாமுயற்சி‘ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ‘அப்டேட்’ தெரிய அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவனத்தை ஈர்க்கும் மந்திரம் இந்த ‘கடவுளே அஜித்தே…’ கூச்சல். ‘கடவுள் அஜித்தே…’ என்று தங்களை மட்டுமல்ல, வெளிநாட்டினரையும் சொல்ல வைத்த மகான்களின் எந்த ‘விடாமுயற்சியும்’ பலனளிக்கவில்லை!
இவருக்கு போட்டியாக தளபதி அரசியலில் குதித்துள்ள நிலையில், ‘தல’ இருப்பதை காட்டவே அவரது ரசிகர்கள் இப்படி செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதே சமயம் தங்களின் ஆதர்ச நாயகனின் படம் குறித்த தகவல்களை கேட்பது ரசிகர்களின் உரிமை என்றும் ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன. ரசிகர்கள் தன்னை தல என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று அஜித் கூறியுள்ளார். ரசிகர்கள் உடனே அவரை கடவுள் என்று ‘பிரொமோட்’ செய்தார்கள்!