நேற்றைய தினம் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான காந்தாரா சாப்டர் 1, பான் இந்திய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம், முந்தைய காந்தாரா படத்திற்கு முன் நிகழ்ந்த கதையாக அமைந்துள்ளது. படத்தின் முதல் நாளிலேயே மிகுந்த வரவேற்பு கிடைத்ததுடன், விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூ குவிந்து வருகிறது.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தனது சமூக வலைதளத்தில் காந்தாரா சாப்டர் 1-ஐ குறித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். “இந்திய சினிமா இதுவரை கண்டிராத மாஸ்டர் பீஸ். இயற்கை, இடி, மழை, தெய்வீகம், காடு – சினிமாவில் அசைக்க முடியாத அனுபவம்” என்று புகழ்ந்துள்ளார். ரிஷப் ஷெட்டி தனியாளாக இப்படத்தை தாங்கி நிறுத்தியதற்கும், பின்னணி இசைக்காகவும் அவர் சிறப்பு பாராட்டுகளை தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு வெளியான காந்தாரா குறைந்த பட்ஜெட்டில் உருவாகியும், நாட்டார் தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு வந்த தனித்துவமான கதைக்களத்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படத்திலும், தெய்வ சக்தி, பழங்குடியின மக்கள் வாழ்க்கை, நிலம் அபகரிக்க நினைக்கும் அரசன் ஆகியவற்றின் மோதலை மையமாகக் கொண்டு கதை சொல்லப்பட்டுள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய செலவில் உருவான இந்தப் படம், ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்ததுடன், பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் இயற்கை காடுகளின் அற்புதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ.89 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள காந்தாரா சாப்டர் 1, விடுமுறை நாட்களின் ஆதரவால் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.