சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி பாடகி சைந்தவி இடையேயான விவாகரத்து வழக்கில், வரும் அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவர்கள் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2024 மே மாதம் இருவரும் பிரிவு குறித்து தனித்தனியாக அறிவித்தனர். அத்துடன், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்திற்கான மனுவையும் தாக்கல் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இறுதி தீர்ப்பு தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த பல பிரபல பாடல்களை சைந்தவி பாடியிருந்தார். ‘அசுரன்’, ‘மயக்கம் என்ன’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களில் அவரின் குரல் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. பிரிவை அறிவித்த பிறகும் இருவரும் இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக மேடையேறியதைப் பார்த்த ரசிகர்கள், “இவர்கள் உண்மையிலேயே விவாகரத்து செய்யப் போகிறார்களா?” என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இதனால், அக்டோபர் 30ஆம் தேதியிலான தீர்ப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இவர்களின் உறவு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.