ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “கூலி” திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியடைந்து வருகிறது. இதில் கலீஷா கதாபாத்திரத்தில் கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா நடித்துள்ளார். ஆனால், அவருக்கு முன்பே அவரது மனைவி தமிழில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமான தகவல்.

உபேந்திரா கன்னட சினிமாவின் பன்முகத் திறமை கொண்ட கலைஞர். அவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். அரசியலிலும் களம் கண்டவர். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, 10 படங்களை இயக்கிய அனுபவமும் உண்டு.
அவரின் மனைவி பிரியங்கா திரிவேதி. திருமணத்திற்கு பின் பிரியங்கா உபேந்திரா என பெயரை மாற்றிக் கொண்டார். அவர் 2002ம் ஆண்டு தமிழில் நடிகை வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா பெங்காலி படங்களில் நடித்து வந்தார். பின்னர் இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார்.
தமிழில் முதன்முதலாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான “ராஜ்ஜியம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டு அஜித் நடித்த “ராஜா” படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் அஜித் அவரை “தயிர் சாதம்” என்று செல்லமாக அழைக்கும் காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதன்பின் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “காதல் சடுகுடு” படத்தில் நடித்தார். மேலும் “ஜனம்” போன்ற சில படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி, மீண்டும் கன்னட மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தினார்.
உபேந்திரா நடித்த முதல் தெலுங்கு படம் “ரா”வில் அவருக்கு ஜோடியாக நடித்தது பிரியங்கா தான். அதன்பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் அதிகமாக சினிமாவில் நடிக்கவில்லை. எனினும், 2024ல் வெளிவந்த “கவுரி” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இப்போது பிரியங்கா உபேந்திரா ரசிகர்களால் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், தமிழில் விஜயகாந்த், அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நினைவுகள் அவரை இன்னமும் ரசிகர்களிடையே பிரபலமாக வைத்திருக்கின்றன.