சென்னை: விஜயகாந்திடம் இருந்த நெருப்பு, வேகம் அவரது மகன் சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கொம்புசீவி’. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை மறுநாள் முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘கொம்புசீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ”கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. ‘உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!’ என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது. ‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.