மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் 2010-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா என 109 படங்களின் பாடல்களையும், அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையையும் இளையராஜாவின் மனைவி ஜீவா (2011-ல் மறைந்தார்) நடத்தும் இசை நிறுவனத்திடம் இருந்து எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, எங்களின் அனுமதியின்றி அந்த பாடல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இளையராஜா தரப்பில், ‘1997-ல் ஒப்பந்தம் போடப்பட்டபோது, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது.’ இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் நீதிபதி பி.இளங்கோ முன் இளையராஜா ஆஜரானார். அவருடன் அவரது வழக்கறிஞர்கள் ஏ.சரவணன், கே.தியாகராஜன் ஆகியோரும் சென்றனர். மியூசிக் மாஸ்டர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், இளையராஜாவிடம் 25-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை நடத்தினார்.
“நீங்கள் எந்த வயதில், எந்த வருடத்தில் சென்னைக்கு வந்தீர்கள்? இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள்?” என்று கேட்டதற்கு, “1968-ல் சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை” என்றார் இளையராஜா. “எந்த வருடத்தில் கார், பங்களா போன்றவற்றை வாங்கினீர்கள்? குறிப்பாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பீச் ரிசார்ட்டை எப்போது வாங்கியீர்கள்?” இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜாவின் வழக்கறிஞர்கள், வழக்குக்கு சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுவதாகக் கூறினர். அப்போது, வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், இளையராஜா இசையமைத்த திரைப்படப் பாடல்களின் உரிமை, இதற்காக தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற தொகை, இளையராஜாவின் தற்போதைய சொத்து மதிப்பு, அவரது மனைவி சொத்துகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு இளையராஜா, “என்னுடைய ஒரே தொழில் இசையமைப்பதுதான். இசையின் மீது எனக்கு இருந்த மோகத்தால் ஆடம்பரமான வாழ்க்கையில் எனக்கு ஆர்வம் இல்லை. எனவே, நான் எப்போது பொருட்களை வாங்கினேன் என்று தெரியவில்லை. படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குனர்களுடன் உரையாடல் மட்டுமே இருக்கும். தயாரிப்பாளர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. பணம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் நான் தலையிடுவதில்லை. எனக்கு சொந்தமாக அலுவலகம் அல்லது ஸ்டுடியோ கூட இல்லை. சினிமா எனக்கு பெயர், புகழ், செல்வம் உட்பட அனைத்தையும் கொடுத்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த இளையராஜா, மதியம் 1.30 மணியளவில் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார்.