சென்னை: ‘மதகஜராஜா’ வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் நான் பயந்து விட்டேன் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மதகஜராஜா’. சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் சுந்தர்.சி பேசும் போது, “சில நாட்களுக்கு முன்பு பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இரவு போன் செய்து “மதகஜராஜா” பார்த்ததாக கூறினார். எப்போதுமே படத்தின் வசூல் பற்றி பேசும் அவர், இப்படத்துக்கு விமர்சனமாக சொல்ல நல்லா இருக்கு என்று சொன்னார். பின் அவர் பேசியதை சொல்லமாட்டேன். பின்பு இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகிவிடும்.
‘மதகஜராஜா’ வெளியீடு என்று முடிவானவுடன் ரொம்பவே பயந்தேன். ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி எடுத்த படம், இப்போது வரவேற்பு இருக்குமா என்ற எண்ணம் இருந்தது.
ஆனால், சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அதுவே ரொம்ப நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. ‘லேட்டா வந்தாலும்… லேட்டஸ்ட்’ என்று ஒருவர் போட்டிருந்தார். அது உண்மை தான்” என்று பேசினார். மேலும் விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்டோரின் உழைப்பை பாராட்டியும் சுந்தர்.சி. பேசினார்.