சென்னை: அற்புதமான முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். எனது 30 ஆண்டுக்கால கேரியரில், 11 வெவ்வேறு மொழிகளில் 300 படங்களைச் செய்திருப்பதற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன் என்று நடிகர் ஆஷிஷ்வித்யார்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி என அனைத்துப் பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்தி. வில்லன், குணச்சித்திர வேடங்கள் எனத் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் தோன்றிய இவர் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை வைத்துப் பல இடங்களுக்குப் பயணித்து Vlog செய்து வருகிறார்.
அதில் அவர், “பார்வையாளர்களாகிய நீங்கள் அனைவரும் முற்றிலும் சரியாக இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் நான் முன்பு நடித்ததைப் போலப் பல படங்களில் நடிப்பதில்லை. அது பற்றி நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களில் சிலர் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்.
நானே இதை ஒப்புக்கொள்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகன். எனது கரியர் முழுவதும் அற்புதமான கதாபாத்திரங்களைச் செய்தவன். ஆனால் இப்போது எனக்கு இதுவரை வழங்கப்படாத கதாபாத்திரங்களைத் தேடுகிறேன்.
அற்புதமான முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். எனது 30 ஆண்டுக்கால கரியரில், 11 வெவ்வேறு மொழிகளில் 300 படங்களைச் செய்திருப்பதற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.
ஆனால் இப்போது நான் சில நல்ல முதன்மை பாத்திரங்களைச் செய்ய முடிவு செய்திருக்கிறேன். சில நேரங்களில் நாம் உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கிறோம்.
வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறோம், ஆனால் நான் மனச்சோர்வுடன் உட்கார்ந்திருக்கப் போவதில்லை. என் வாழ்க்கையில் கசப்புணர்வை வைத்திருக்க மாட்டேன்” எனப் பேசியிருக்கிறார்.