சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படம், அறிமுக இயக்குநர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 5 அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் படக்குழுவினர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் வர்ஷா பாரத், நடிகர்களைத் தேர்வு செய்ய எந்த ஆடிஷனும் நடத்தவில்லை என்றும், ரம்யா கதாபாத்திரத்திற்காக கலாஷேத்ரா வாசலில் பல நாட்கள் காத்திருந்ததாகவும் கூறினார். நடிகர்களின் முகபாவனைகளிலேயே கதாபாத்திர தேவைகளை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் எப்போதும் தன்னை ஈர்க்கும் என்றும், தனது படங்களில் அதிகமான பெண் கதாபாத்திரங்களை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார்.
நடிகை சாந்தி பிரியா, இந்தப் படத்தில் நடித்தது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். எந்தவிதமான மேக்கப்பும் இல்லாமல், இயல்பான தோற்றத்தில் நடித்தது சவாலானதாக இருந்தாலும், இயக்குநர் தன்னிடம் வைத்த நம்பிக்கையாலேயே அது சாத்தியமானது என்றார். மேலும், தமிழ் சினிமாவில் மீண்டும் வருவது மகிழ்ச்சியாகவும் மனநிறைவை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் வர்ஷா பாரத், தனது படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப் குறித்து பேசும்போது, அது தனது வாழ்க்கையில் ஒரு கனவு நனவான தருணமாக இருந்தது என்றார். “பேட் கேர்ள்” எந்த சமூகத்தையும் குறிக்காது, ஒரு தாய் – மகள் உறவை மையமாகக் கொண்டது என்றும், இந்த படம் தான் ஒரு புதிய அடையாளத்தை அளித்ததாகவும் கூறினார். “கெட்ட பெண்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை, உலகில் யாருமே பேட் கேர்ள் அல்ல, அது சமூகமே உருவாக்கிய லேபிள் என்றார்.