சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில், அனிருத்தின் இசையுடன், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகிய புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான முதல் பாகம் ‘ஜெயிலர்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர் தோல்விகளுக்கு மத்தியில் ஒரு வெற்றியை தேடிக்கொண்டிருந்த ரஜினி, இந்த படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பினார். அதேபோல், ‘பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு விமர்சன சவால்களை சந்தித்த நெல்சனுக்கும் இந்த படம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ‘ஜெயிலர்’ படம் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றியை பெற்றது. உலகளவில் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, ரஜினியின் கலையை மீண்டும் மக்களிடம் கொண்டுசென்றது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக ‘ஜெயிலர் 2’ உருவாக்கம் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்பின் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது. இந்நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் பிறந்த நாளை படக்குழு கொண்டாடியது. கேக் வெட்டும் நிகழ்வின் புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்த புகைப்படங்களில் ரஜினியின் தோற்றமும், படப்பிடிப்பு சூழலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விஜய் கார்த்திக் கண்ணன், ‘டார்லிங் 2’ மூலம் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, ‘கானா’, ‘டாக்டர்’, ‘ஜெயிலர்’, ‘டாக்கு மகராஜ்’ ஆகிய படங்களில் பணியாற்றியவர். ‘ஜெயிலர்’ படத்தில் அவரது ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவரின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இந்த புகைப்படங்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து, ‘ஜெயிலர் 2’ படத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கியுள்ளன.