சென்னை: ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சைரன்’. இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘பிரதர்‘ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘ஜெனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து அந்த வரிசையில் உள்ளன. இந்நிலையில், இந்தப் படங்களுக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி, ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
‘ஜேஆர்34’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுந்தர் ஆறுமுகம் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
‘பிரதர்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி ஹாரிஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணைகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரைப் பொறுத்தவரை, ஜெயம் ரவி இரண்டு வெவ்வேறு முகங்களுடன் அசத்துகிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.