ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா: சாப்டர் 1 அக்டோபர் 2ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஹைதராபாத் ப்ரோமோஷனின் போது ஏற்பட்ட சர்ச்சையால் ரசிகர்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி தெலுங்கில் பேசாமல் கன்னடத்தில் மட்டுமே பேசியது, ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக சமூக வலைதளங்களில் #BoycottKantaraChapter1 என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவி வருகிறது.

பவன் கல்யாணின் OG படம் கர்நாடகாவில் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பிறகு, தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவர்கள், காந்தாரா படக்குழு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கன்னட மொழியில் மட்டுமே பேசிய ரிஷப் ஷெட்டி, தமிழிலும் இந்தியிலும் ப்ரோமோஷன் செய்தபோது அந்தந்த மொழியில் பேசியிருந்தார் என்பதும் ரசிகர்களின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ரிஷப் ஷெட்டி “என் இதயத்தில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல கன்னடமே சரியான மொழி” என்று விளக்கமளித்தாலும், தெலுங்கு ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. சமூக வலைதளங்களில் #BoycottKantaraChapter1 தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து, ரசிகர்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட, காந்தாரா: சாப்டர் 1 படம் முன்பதிவிலேயே இந்தியாவில் ரூ.4.2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது, 2022ல் வெளியான முதல் பாகத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ரசிகர்கள் எதிர்ப்புடன் இருந்தாலும், படத்தின் வர்த்தக எதிர்பார்ப்பு மிக உயர்வாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.