சென்னை : தெலுங்கு படத்தில் ஹீரோயினாக கயாடு லோஹர் கலக்கப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அதன்பின்னர் மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார் கயாடு லோஹர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜாதி ரத்னாலு பட இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் விஷ்வக் சென் கதாநாயகனாக நடிக்கும் ‘பங்கி’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள தற்போது கயாடு லோஹர் ஐதராபாத் சென்றிருப்பதாகவும் தெரிகிறது.