கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகுதத்தா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ரகுதத்தா திரைப்படம் இந்தி திணிப்புக்கு எதிரானது மட்டுமல்ல அனைத்து திணிப்புகளுக்கும் எதிரானது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ரகு தத்தாவின் கதையை கேட்டதும் எனக்கு சரியாக இருக்குமா என்று நினைத்தேன். ஆனால் இயக்குனர் என் நடிப்பில் உறுதியாக இருந்தார். எனது ஹிந்திப் படம் பேபி ஜான் டிசம்பரில் திரைக்கு வரும்போது, இந்தி திணிப்புக்கு எதிரான ரகு தத்தாவில் எனது கதாபாத்திரம் குறித்து பலர் கேட்கிறார்கள்.
இந்தப் படம் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை பேசுகிறது. அதில் ஹிந்தியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். நல்ல நகைச்சுவை படமாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.