கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பளத்தை குறைக்கக் கோரியும், கேளிக்கை வரி உயர்வைக் கண்டித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் படப்பிடிப்புகள் நடைபெறாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.சுரேஷ்குமார் கூறும்போது, “ஜிஎஸ்டியுடன் சேர்த்து கேளிக்கை வரியையும் மாநில அரசு உயர்த்தியுள்ளது. வரியைக் குறைக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள். இவர்களின் சம்பளத்தை ஒப்பிடும்போது, தியேட்டர் வசூலில் 10 சதவீதம் கூட வரவில்லை. உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. பல படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. ஓடிடி நிறுவனங்கள் அனைத்து படங்களையும் வாங்குவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்,” என்றார்.