கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என்பது ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான திருநாள். இந்த நாளில் கண்ணனை குழந்தையாக பாவித்து வழிபடுவதால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, ஞானம் நிலைக்கும் என்று நம்பப்படுகிறது. கண்ணனின் அவதாரம் தர்மத்தை நிலைநாட்டவும், பகவத்கீதையின் மூலம் மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தவும், கர்மவினையால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவும் வழிகாட்டுகிறது.

இந்த நாளில் வீட்டின் வாசலில் கோலம் போட்டு, பூஜை அறை வரை சிறிய பாதங்களை வரையுவது வழக்கம். அதோடு முறுக்கு, சீடை, அதிரசம், லட்டு, தட்டை போன்ற இனிப்புகளையும் நெய்வேத்தியமாக வைத்து பூஜை நடத்துவர். குழந்தைகள் ராதா, கிருஷ்ணர் வேடமிட்டு விளையாடுவார்கள்.
சமீபத்தில் பல திரைப் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். நடிகை சாந்தி ப்ரியா தனது வீட்டில் விழாவை கொண்டாடி, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது கணவர் ராகுல், மகள் ரூபிகாவுடன் விழா கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்த இவர், திருமணத்திற்கு பின் சினிமாவில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அதேபோல், நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தனது மகன் நட்சத்திரனை கிருஷ்ணர் வேடமிட்டு விழா கொண்டாடினார். விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா வேடத்தில் நடித்து பிரபலமான இவர், தற்போது திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு, கிருஷ்ண ஜெயந்தி குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் பரப்பியிருக்கிறது. திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் வீடுகளில் இந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.