சென்னை: தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்த குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படத்தில், முதலாவது பாதியில் ரசிகர்களை வியக்க வைத்ததோடு, இரண்டாவது பாதியில் படத்தின் வேகம் குறைந்து ஏமாற்றம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்த பிச்சைக்கார தேவா கதாபாத்திரம் மிகவும் நம்பத்தகுந்ததாக இருந்தது. அவரது உடல்மொழி, முகபாவனை, டயலாக் டெலிவரி அனைத்தும் நிஜமாகவே பிச்சைக்காரராக வாழ்ந்தவர் போல இருந்தது. நாகார்ஜுனா நடித்த தீபக் என்ற கதாபாத்திரமும் சிக்கலானதும், பலதரப்பட்ட மனநிலை கொண்டதுமாக அமைந்தது. அவரை நல்லவரா கெட்டவரா என்று புரிந்து கொள்ள முடியாமல், கதைக்கு சுவாரசியத்தை சேர்த்தார்.
ராஷ்மிகா மந்தனா, தனுஷின் ஜோடியாக இல்லாமல் ஒரு வழிகாட்டியாக காட்சியளிப்பதும் புதுமையாக இருந்தது. “நானும் ஒரு பிச்சைக்காரி தான்” என்று சொல்லும் வசனம், அவருடைய பாத்திரத்தின் ஆழத்தை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. குப்பை வண்டி காட்சிகளில் அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. இப்படத்தில் மூவரின் நடிப்பு படத்திற்கு மெருகேற்றி இருந்தது.
ஆனால், படம் முழுமையாக பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் ஆக வேண்டிய நிலையில், இயக்குனர் சேகர் கம்முலா சில முக்கியமான இடங்களில் தவறியுள்ளார். முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி வலிமையான அடித்தளத்தை அமைத்துவிட்ட அவர், இரண்டாம் பாதியில் கார்ப்பரேட் வில்லனை மாறுபட்ட வகையில் மேடையில் கொண்டு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளைமேக்ஸ் பகுதியில் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இணைந்து வில்லனை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால், படம் மேலும் வலிமையாக இருந்திருக்கும். ஆனால் அவசரமாக முடிக்க வேண்டுமென்ற இயக்குனரின் விருப்பம், கதையின் முழுமையை பாதித்திருக்கிறது. இதுவே அவருடைய மிகப்பெரிய பிழையாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், தனுஷின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததோடு, நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகாவின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. இப்படத்தில் உள்ள குறைகளை விட நடிப்பின் ஆழம் மற்றும் பிரமாண்ட முயற்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்துகின்றன. தனுஷின் அடுத்த படமான “இட்லி கடை” குறைகள் இல்லாமல், முழுமையான உணவாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.