டெல்லி: கொல்கத்தாவை சேர்ந்த 74 வயதான நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிதுன் சக்ரவர்த்தி பெங்காலி திரையுலகில் 1976-ம் ஆண்டு ‘மிரிகயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தால், டிஸ்கோ டான்சர், கோல்மால், தாதா, டைகர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2015-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான ‘யாகவா ராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்நிலையில், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியானதற்காக மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துக்கள். இந்திய சினிமாவுக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சினிமாவில் அவர் முத்திரை பதித்ததற்கு இந்த விருது ஒரு சிறந்த உதாரணம்.
தொழில்முறை மற்றும் தனிப்பட்ட முறையில் அவருக்கு மேலும் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன். அக்டோபர் 8, 2024 அன்று நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்,” என்றார்.