சென்னை: நடிகர் மாதவன் நடிக்கும் “சர்க்கிள்” படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தகவல் ெளியாகி உள்ளது. மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த ‘சர்க்கிள்’ படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். மாதவன் கங்கனா ரணாவத்துடன் இணைந்து இரண்டு இந்தி படங்களில் நடித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.தற்போது மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் ஜி.டி நாயுடுவாக மாதவன் நடிக்கிறார்.
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான ‘தலைவி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான ‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்திருந்தார்.
இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘சர்க்கிள்’. இப்படம் அசாதாரண உளவியல் திரில்லர் படம் என்று கூறப்படுகிறது.
எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‘சர்க்கிள்’ படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.