திருவனந்தபுரம்: மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான படங்கள் ‘பிரமயுகம்’, ‘மஞ்சும்மாள் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’, ‘வர்ஷங்களே ஷேஷம்’, ‘பிரேமலு’, ‘ஆட்டம்’, ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘உள்ளொழுக்கு’, ‘வாழ’, ‘ஏஆர்எம்’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இதில் ‘மஞ்சும்மாள் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆவேசம்’, ‘பிரேமலு’, ‘ஏஆர்எம்’ போன்ற படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளன.
‘வர்ஷங்கள் ஷேஷம்’, ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘கிஷ்கிந்தா காண்டம்’ போன்ற படங்கள் ₹50 கோடி வசூல் செய்தது. மோகன்லாலின் ‘மணிசித்திரதாழ்’, ‘தேவ தூதன்’ போன்ற படங்கள் மீண்டும் வெளியாகின. இந்நிலையில், இந்த ஆண்டு மலையாள திரையுலகிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘2024- ஆண்டு வெளியான 199 படங்களில் 26 படங்கள் வசூலில் வெற்றி பெற்றுள்ளன. 199 படங்களின் தயாரிப்பு செலவான 1,000 கோடி ரூபாயில் வெறும் 300 கோடி ரூபாய்தான் வசூல். மீதமுள்ள 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் அடைந்த படங்களின் நடிகர்களும், உதவி செய்ய முன்வரும் நடிகர்களும் நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும். இல்லை என்றால் தயாரிப்பாளர்களின் நிலை படுமோசமாகிவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.