சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். பசி காரணமாக தான் வாழைப்பழம் திருடிய நினைவுகளை பகிர்ந்த அவர், பள்ளிக் காலங்களில் உணவின்றி படிக்க வேண்டிய சிரமங்களை நினைவு கூர்ந்தார். தினமும் நான்கு கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு சென்று பசியோடு வீடு திரும்பிய நாட்கள் அவருக்கு மறக்க முடியாதவை எனக் கூறினார். அந்த நிலையில்தான் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழைப்பழம் சாப்பிட்ட அனுபவமே அவரின் வாழ்வில் உணவாக இருந்தது என்றார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார். கல்வித் துறையின் நலத்திட்டங்கள், குறிப்பாக காலை உணவு திட்டம், மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைத்ததாக மாரி செல்வராஜ் வலியுறுத்தினார். பசி காரணமாக பல மாணவர்கள் படிப்பை கைவிட்ட சூழ்நிலையில், இந்த திட்டம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வை பாதுகாத்தது என்றார்.
விழாவில் உரையாற்றிய அவர், “வாழை திரைப்படம் வெளிவந்தபின் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடியே என்னிடம் தொலைபேசியில் பேசியது எனக்கு பெருமை. என் படங்களை எப்போதும் பாராட்டும் முதல்வரிடம், இந்த உணவு திட்டத்தை குறிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது” என்று தெரிவித்தார். சமூக நீதி, சமத்துவம் போன்ற மதிப்புகளை பள்ளிகளில் நிலைநிறுத்துவதில் அரசு கல்வித்துறையின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.
திருநெல்வேலியில் தனது பள்ளிக் காலத்தில் சாதி மனப்பான்மையால் சந்தித்த சிரமங்களை நினைவு கூர்ந்த அவர், பள்ளிகளில் சாதி அடையாளங்களை நீக்கியதை பெரிய முன்னேற்றமாகக் கூறினார். “பள்ளிக்கூடம் எனக்கு எனது பள்ளிக்கூடம் தான்” என்று சொல்லும் சூழ்நிலையை அரசு உருவாக்கியதற்காக கல்வித்துறைக்கு கோடான்கோடி நன்றிகள்” என்று மாரி செல்வராஜ் நெகிழ்ந்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அவரது உரையை பாராட்டினர்.