ஹைதராபாத்: கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள மிராய் திரைப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய காட்சிகளும் புராண டச் கலந்த சூப்பர் ஹீரோ கதையும் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ஹனுமான் படம் 300 கோடி வசூலைக் குவித்து தேஜா சஜ்ஜாவை தேசிய அளவில் புகழ்பெறச் செய்தது. அந்த வெற்றிக்குப் பிறகு அவர் ஜெய் ஹனுமான் எனும் தொடர்ச்சிப் படத்தை உருவாக்கி வருகிறார். அதற்கிடையில், மிராய் எனும் படத்திலும் நடித்துள்ளார்.

முதலில் செப்டம்பர் 5ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரைலர் வெளியீட்டின் போது புதிய தேதியாக செப்டம்பர் 12ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
டிரைலரில், த்ரேதா யுகத்தில் இருந்த ஆயுதமே மிராய் எனும் வித்தியாசமான கதை அமைப்பு காணப்படுகிறது. வில்லனின் கையில் 9 நூல்கள் சென்றுவிட்டால் கங்கை ரத்த வெள்ளமாக மாறும் எனும் புராண பில்ட்அப்புகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில், நடிகை ஸ்ரேயா தேஜா சஜ்ஜாவின் தாயாக நடித்துள்ளார். ஹீரோயினாக ரித்திகா நாயக், வில்லனாக மனோஜ் மஞ்சு, மேலும் ஜெயராம், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ் சினிமா அச்சப்படுகின்ற சூப்பர் ஹீரோ கதையை டோலிவுட் தைரியமாக கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹனுமான் படத்தில் ஹனுமானை மையமாகக் கொண்டிருந்தது. அதேபோல் மிராய் படத்தில் ராமரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. யார் ராமராக நடித்துள்ளனர் என்பது குறித்து ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் உருவாகியுள்ளது.
30 கோடி பட்ஜெட்டில் உருவான ஹனுமான் 300 கோடி வசூல் செய்த நிலையில், இதைவிட அதிக பட்ஜெட்டில் உருவான மிராய் அடுத்த 300 கோடி கிளப்பில் சேருமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
மிகப்பெரிய காட்சிகள், வித்தியாசமான கதை மற்றும் ஆன்மிக டச் காரணமாக மிராய் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.