திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதையடுத்து நடிகர் மோகன்லால் நடிகர் சங்கமான ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவருடன் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘கேரள கிரிக்கெட் லீக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நான் எங்கும் ஓடிப்போகவில்லை.
எனது தனிப்பட்ட பிரச்சனையால் கேரளாவில் இல்லை. என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ததால், ஹேமா கமிட்டி அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.
‘அம்மா’ சங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல. இது ஒரு குடும்பம் போன்றது. சங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. எல்லா கேள்விகளுக்கும் ‘அம்மா’ அமைப்பே பதில் சொல்ல முடியாது. இந்தக் கேள்விகள் அனைவராலும் கேட்கப்பட வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கு நிறைய நற்காரியங்கள் செய்துள்ளோம்.
மற்ற திரையுலகுடன் ஒப்பிடும்போது நமது திரையுலகம் நன்றாகவே இருக்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
மற்ற திரையுலகிலும் ஹேமா கமிட்டி போல் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த முக்கியமான நிகழ்வு மலையாள திரையுலகில் இருந்து தொடங்கட்டும். மலையாள திரையுலகத்தை நம்பி பல குடும்பங்கள் இருப்பதால் ஊடகங்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சர்ச்சையால் ஒட்டுமொத்த திரையுலகமும் பாதிக்கப்படாமல் இருக்க ஊடகங்கள் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞர்களாகிய நாம் பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய திரைத்துறையை அழிக்க முயற்சிக்காதீர்கள். திரைத்துறையில் நிலவும் பிரச்னைகளை களைந்து, உரிய தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்றார். மேலும், “உங்கள் அனைவருக்கும் என்னை பல ஆண்டுகளாக தெரியும். இல்லையா? பிறகு எப்படி ஒரே நாளில் நான் உனக்கு அந்நியனானேன்.
ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முறையில் எனது படங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஹேமா கமிட்டியிடம் தெரிவித்துள்ளேன். அதேசமயம் ஒட்டுமொத்த திரையுலகம் குறித்தும் என்னால் கருத்து சொல்ல முடியாது.
அனைத்து குற்றச்சாட்டுகளும் தேவையில்லாமல் எங்கள் மீது சுமத்தப்படுகின்றன. அதை நிறுத்தி மலையாள சினிமாவை காப்பாற்றுவோம். ‘அம்மா’ அமைப்பு இதை செய்யவில்லை என்று கூறுபவர்கள், சுதந்திரமாக வந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சங்கத்தை வழிநடத்தட்டும்,” என்றார்.
அம்மா சங்கம் கலைக்கப்பட்டது குறித்து கேட்டபோது, ”இந்த சம்பவத்திற்கு ‘அம்மா’ சங்கம் மட்டும் பதில் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த திரையுலகமும் பதில் சொல்ல வேண்டும். இந்த அறிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகளை எடுத்துரைக்கிறது. என்னை விட உங்களுக்கே நன்றாக தெரியும் என்றார்.”