நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தம்முடு’ படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக அளிக்கப்பட்ட ஒரு நேர்காணலில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தான் செய்த தவறு குறித்து தில் ராஜு வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து தில் ராஜு கூறுகையில், “எனது திரைப்பட வாழ்க்கையில், ஷங்கர் போன்ற ஒரு பெரிய இயக்குனருடன் நான் ஒருபோதும் பணியாற்றியதில்லை. ‘கேம் சேஞ்சர்’ எனது முதல் தவறான முடிவு. படத்தின் ஒப்பந்தத்தில் எனது கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட்டு அதைத் தயாரிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அது என் தவறு.

படத்தின் எடிட்டர் சொன்னது போல், படத்தின் காட்சிகள் ஏழரை மணி நேரம் நீளமாக இருந்தன என்பது உண்மைதான். ஒரு படத்தில் விஷயங்கள் சரியாக நடக்காதபோது, அவற்றை சரிசெய்ய வேண்டியது தயாரிப்பாளரின் பொறுப்பு. நான் பழியை ஏற்றுக்கொள்கிறேன். ‘கேம் சேஞ்சர்’ போன்ற ஒரு திட்டத்திற்கு முதலில் பச்சைக் கொடி காட்டியிருக்கக் கூடாது.” இவ்வாறு தில் ராஜு கூறினார்.
‘கேம் சேஞ்சர்’ என்பது ஷங்கர் இயக்கிய படம், ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.