சென்னை: விவாகரத்து ஆகியும் இன்னும் பாசம் குறையலையே. கணவர் ராமராஜன் குறித்து நளினி என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
நடிகர் ராமராஜனும், நளினியும் காதல் மணம் செய்து கொண்டவர்கள். இருவரும் 1987ல் திருமணம் செய்து கொண்டனர். 2000த்தில் விவாகரத்து ஏற்பட்டது. நளினி விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காவலன் படத்தில் ராமராஜனுடன் இணைந்து நடித்துள்ளார். அதே போல தமிழ்த்திரை உலகில் மக்கள் நாயகன் என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமராஜன்.
இவர் தமிழ் சினிமா உலகில் ஆடை, அழகு போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையே இல்லை. யதார்த்தமான நடிப்பே போதும் என்று புரட்சி செய்து பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர். நடிகர் மட்டுமல்ல. இவர் இயக்குனரும் கூட. நளினி பல பக்திப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு தாய்மார்களைப் பெரிதும் கவரும். இயல்பிலேயே கண்ணியமாகப் பேசும் குணம் கொண்டவர்.
சமீபத்தில் கூட ராமராஜனைப் பற்றி பல கண்ணியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கேம் ஷோ ஒன்றில் ‘மாங்குயிலே..’ பாடல் போடப்பட்டது. இது என் கணவர் நடித்த படத்தின் பாடல். ‘என் கணவரின் படங்களுக்கு அவரது ரசிகை நான்’ என்றார். அதுமட்டுமல்ல. விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஷோவில் முருகப்பெருமானின் பக்திமயமான பாடல்களைப் பாடச் செய்தனர். அப்போது ‘திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ என்ற பாடலை ஒரு குழந்தை பாடியது. அப்போது நளின சொன்ன வார்த்தைகள் தான் இவை.
‘இந்தப் பாடலைக் குழந்தை பாடியபோது எனக்கு எங்க ஊரான திருச்செந்தூருக்கே போய்ட்டு வந்த ஃபீல் வந்தது. அவன் அருள் இருந்ததால்தான் என் கணவர் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்’ என பெருமையோடு கூறினார் நளினி. விவாகரத்து ஆகி ஒரு சில ஆண்டுகளிலேயே பழசை மறந்து புது கல்யாணம் செய்து கொள்ளும் தம்பதியர் மத்தியில் 25 ஆண்டுகள் ஆன பின்பும் தன் கணவரைப் பற்றி மரியாதையுடன் பெருமையாக நளினி சொல்கிறார் என்றால் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.