சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக, இவர்களது திருமணம் முறிவடையும் என வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

தமிழ் திரையுலகில் நயன்தாரா வெற்றிகரமான நடிகையாக நீண்டகாலமாக நிலைத்திருக்கிறார். சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் “நானும் ரவுடி தான்” படத்திலிருந்து நெருங்கி வந்தனர். 6 ஆண்டுகள் காதலித்து வந்தவர்கள், 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகள் வாடகை தாயின் மூலம் பிறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகள் மற்றும் அரசு விசாரணைகளும் நடந்தன. அதனைத் தொடர்ந்து, இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிவதற்கான முடிவை எடுத்துவிட்டதாக வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் இருந்த நயன்தாரா, தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். புல்வெளியில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் மேல் அமர்ந்து, இருவரும் தூரத்தில் ஏதோ ஒன்றைப் பார்ப்பது போல இருந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “எங்களைப் பற்றி வதந்திகளை பார்ப்போது எங்களுடைய ரியாக்ஷன்” என பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் நயன்தாரா, தங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும், தாமும் விக்னேஷ் சிவனும் இணைந்தே இருக்கிறோம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.