மும்பை: நட்சத்திர அந்தஸ்து என்பது நிரந்தரம் அல்ல என்று நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அமீர்கான் ‘நடிகர், நடிகைகளின் நட்சத்திர அந்தஸ்து நிரந்தரமானது அல்ல’ என்று தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இயற்கை சக்கரம் நிரந்தரமாக சுற்றிக்கொண்டே இருக்கும். புதிய நடிகர்கள் உருவாவார்கள். பழையவர் மறைந்து விடுவார்கள். நட்சத்திர ஒளி என்பது நிரந்தரம் அற்றது. சில ஒளிகள் அதிக காலம் நீடித்து இருக்கும். சில ஒளிகள் மிகக் குறைந்த காலமே இருக்கும். ஆனால் மறைவது மட்டும் உறுதி.
ஒவ்வொரு தலைமுறையிலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் நாங்கள் இரண்டு தலைமுறை ரசிகர்களை பார்த்தோம். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வெளியே போகவேண்டியதுதான். இது தவிர்க்க முடியாதது. புதிய நீர் வரும்போது பழைய நீரை அடித்துச்சென்று விடும். அது இயற்கையின் நியதி” என்றார்.