‘லோகா’ படம் அதிக வசூல் செய்த மலையாளப் படத்தின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மலையாளப் படங்களில் அதிக வசூல் செய்த ‘எம்புரான்’, ‘மஞ்சும்மாள் பாய்ஸ்’ மற்றும் ‘துடரும்’ ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவை அனைத்தும் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘லோகா’வும் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. விரைவில் ‘துடரும்’ மற்றும் ‘மஞ்சும்மாள் பாய்ஸ்’ வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘எம்புரான்’ வசூலை முறியடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சில வர்த்தக நிபுணர்கள் நிச்சயமாக அதை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஏனெனில் இன்னும் சில வாரங்களுக்கு மலையாளத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த வசூல் காரணமாக படக்குழு மிகவும் உற்சாகமாக உள்ளது. மேலும் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியை விரைவில் குழு தொடங்கும். துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’.
இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டோமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவியும், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.