சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கில் காவல்துறையிடம் இருந்து சம்மன் எதுவும் வரவில்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். உயிர்களை அழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாக வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது உண்மைதான்.அந்த விளம்பரத்துக்காக ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அதன் பிறகு, அது தவறு என்று உணர்ந்து ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. அதன் பிறகு ஒரு வருடம் கழித்து அதே விளம்பரத்தில் நடிக்கச் சொன்னார்கள். ஆனால் என்னால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு காவல்துறையிடம் இருந்து சம்மன் எதுவும் வரவில்லை.

அந்த விளம்பரத்தை குறிப்பிட்ட நிறுவனம் 2021-ல் மீண்டும் பயன்படுத்தியதால், அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி நிறுத்திவிட்டேன். ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்று அப்போதே முடிவு செய்தேன். “இளைஞர்களுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை கூறுகிறேன்.
கேமிங் ஆப்களை பயன்படுத்தாதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும், இளைஞர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகி விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.