திருச்சியில் நடைபெற்ற இட்லி கடை திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு ரசிகர்களிடம் உணர்ச்சி பூர்வமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற விழாவில் தனுஷின் உரை பலரது மனதையும் தொட்டது.

நிகழ்ச்சியில் யூடியூப் சேனல் பரிதாபங்கள் குழுவினர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த தனுஷ் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்தார். “நாங்கள் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாதவர்கள். அதனால் பூ பறிக்க வேலைக்குச் சென்று அந்த பணத்தை எங்கள் செலவுக்கு பயன்படுத்துவோம். அப்பா இயக்குநராக ஆன பிறகும் சில ஆண்டுகள் சிரமம் தான். 1994க்குப் பிறகுதான் எங்களுக்கு சௌகரியம் வந்தது” என அவர் உருக்கமாக கூறினார்.
சிறுவயதில் ஒல்லியாக இருந்ததற்காக கிண்டல்களை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். “அந்தக் காலத்தில் கஷ்டமாக இருந்தாலும், பக்குவம் வந்துவிட்டது. புரூஸ்லி கூட ஒல்லியாகத்தான் இருந்தார்” என்று நகைச்சுவையோடு அவர் பதிலளித்தார். இதனால் ரசிகர்கள் கைதட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.
மேலும், கஷ்டமான நாட்களில் யார் துணை நின்றார்கள் என்ற கேள்விக்கு, படத்தில் இடம்பெற்ற தனது எழுத்து பாடலை குறிப்பிட்டார். அதன்பின் அந்த பாடலை ரசிகர்களுக்காக பாடியும் காட்டினார். அவரது உரையும் பாடலும் அங்கு இருந்தவர்களை நெகிழச் செய்தது. இதன் மூலம் சமீபத்தில் தனுஷின் வாழ்க்கை குறித்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கும் மறைமுக பதில் அளித்துவிட்டார் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.