சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பல படங்கள் திரையரங்குகளை சென்றடைய உள்ளன.

மதராஸி: தீனா மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக திகழ்கிறார். அவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
பேட் கேர்ள்: வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம். அஞ்சலி சிவராமன் நாயகியாக நடிக்க, சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டீசர் வெளியானபோதே சில கருத்துக்களால் சர்ச்சை கிளம்பிய இப்படம், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காந்தி கண்ணாடி: கலக்கப்போவது யாரு? மூலம் பிரபலமான பாலா, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நமிதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துள்ளார். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.
காதி (Ghaati): அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த தெலுங்கு திரைப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பாகி 4: டைகர் ஷ்ராப், சஞ்சய் தத் இணைந்து நடித்துள்ள பாலிவுட் அதிரடி படம். ஹர்ஷா இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதே தேதியில் தி பெங்கால் பைல்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் தமிழ் படங்களில், சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி அதிக வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றிமாறனின் தயாரிப்பில் வந்திருக்கும் பேட் கேர்ள் படமும் தனி ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவ உள்ளது.