டெல்லி: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற “வீரா ராஜ வீரா” பாடல் தனது தந்தை மற்றும் தாத்தாவால் “சிவ ஸ்துதி” பாடலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பாடலைப் பயன்படுத்த அவர் முறையான அனுமதியைப் பெறவில்லை என்றும் கூறி பாடகர் பயஸ் வசிஃபுதீன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், ‘வீர ராஜ வீர’ பாடல் சில மாற்றங்களுடன் ‘சிவ ஸ்துதி’ பாடலின் இசையை அடிப்படையாகக் கொண்டது அல்லது ஈர்க்கப்பட்டது என்று கூறினார்.

இதன் காரணமாக, நீதிமன்ற பதிவாளருக்கு ரூ.2 கோடியும், மனுதாரருக்கு ரூ.2 லட்சமும் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உத்தரவிட்டது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு, “சிவ ஸ்துதி” பாடல் துருபத் வகையைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய இசை என்றும், “வீர ராஜ வீர” பாடல் இந்துஸ்தானி பாரம்பரிய இசை என்றும், அது பதிப்புரிமைக்கு உட்பட்டது அல்ல என்றும் வாதிட்டது.
இதையடுத்து, இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு அமீராவில் நீதிபதி ரவிசங்கர் மற்றும் அஜய் திக்பால் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.2 கோடியை செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.