இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப் பெயர் பெற்ற பிரபுதேவா சமீபத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் தனது மகன் ரிஷி ராகவேந்திர தேவாவை அறிமுகம் செய்தார். பிரபுதேவா நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள அவர், 30 வருட திரை வாழ்க்கையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சென்னை YMCA மைதானத்தில் பிரபுதேவாவின் முதல் தனிப்பட்ட நடன நிகழ்ச்சி அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வடிவேலு, தனுஷ், இயக்குநர் ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக, “பேட்ட ராப்” பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய இளைஞர் ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போதுதான் அந்த இளைஞர் பிரபுதேவாவின் மகன் ரிஷி ராகவேந்திர தேவா என்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது பெரும் கவனம் பெற்றது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, பிரபுதேவா தனது எக்ஸ் தள பதிவில் மகன் ஆடும் வீடியோவை பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “என் மகன் ரிஷி ராகவேந்திர தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இது நடனம் மட்டுமல்ல, மரபும் ஆர்வமும் கலந்த ஒரு பயணம். இது இப்போது தொடங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பு பிரபுதேவாவின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் தனது மகனுக்கு தனியுரிமையை பாதுகாத்து வந்த நிலையில், இந்த நிகழ்ச்சி மூலம் மகனை ரசிகர்களுக்குப் பரிச்சயப்படுத்தியிருக்கிறார். இதனால், அவரது மகன் எதிர்காலத்தில் சினிமா அல்லது நடனத்துறையில் புகழ்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரசிகர்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரபுதேவாவின் நடன திறமை அவருடைய மகனிடமும் தொடருமா என்பது எதிர்காலம் சொல்லும். ரசிகர்கள் இதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.