சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் டியூட் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கொடி நாட்டியுள்ளது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்த இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியானது. ஆரம்பத்தில் சில வலைத்தளங்கள் டியூட் படத்தின் வசூலை 10 கோடி என கூறினாலும், தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்படி, படம் முதல் நாளிலேயே உலகளவில் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “லவ் டுடே”, “டிராகன்” படங்களை விட “டியூட்” அதிக வசூல் செய்ததில் மகிழ்ச்சி என அவர் கூறினார்.
சுமார் 27 கோடி ரூபாயில் தயாரான டியூட், முதல் நாளிலேயே 22 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் தற்போது தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளார். ரசிகர்கள் சமூக ஊடகங்களில் “டியூட் தான் தீபாவளி வின்னர்!” என பெருமையாக கூறி கொண்டாடி வருகின்றனர்.
துருவ் விக்ரமின் பைசன் படம் 2.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்த நிலையில், அதனை விட பத்து மடங்கு வசூல் பெற்று “டியூட்” முன்னிலை பெற்றுள்ளது. இதனால், தீபாவளிக்கான பெரிய ஹிட் படம் “டியூட்” என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். விமர்சனங்கள் கலந்த நிலையில் இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸ் வசூல் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.