தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக தொடங்கி, நடிகராக மாறிய அவர் குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இந்தாண்டு தீபாவளி அவருக்கு மிக சிறப்பானதாக அமைய இருக்கிறது. காரணம், ஒரே நாளில் அவர் நடித்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

முதலில் விக்னேஷ் சிவன் இயக்கிய “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” என்ற படம் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு, கீர்த்திஸ்வரன் இயக்கிய “ட்யூட்” படமும் அதே நாளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருவதால், ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
“ட்யூட்” படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். காதல், நகைச்சுவை கலந்த கதைக்களம் கொண்ட இப்படம், இளைஞர்களை கவரும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை சுமார் 25 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திரையரங்குகளிலும், பின்னர் டிஜிட்டல் தளத்திலும் இப்படம் பேசப்படும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்தாண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”, “ட்யூட்” மற்றும் துருவ் விக்ரம் நடித்த “பைசன்” ஆகிய படங்கள் மோதவுள்ளன. ஒரே நாளில் பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் வெளிவருவது தமிழ் சினிமாவில் அரிதாக நடைபெறும் விஷயம் என்பதால், அனைவரின் கவனமும் அவர்மீதே திரும்பியுள்ளது. இந்த டபுள் ரிலீஸ் மூலம் அவர் ஹாட்ரிக் ஹீரோவாக திகழ்வாரா என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.