இந்திய திரையுலகத்தில் தொடங்கி ஹாலிவுட்டில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது மீண்டும் இந்திய சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தென்னிந்தியாவில் தளபதி விஜயுடன் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமான அவர், தற்போது ராஜமௌலி இயக்கும் மகேஷ் பாபுவின் SSMB 29 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ரா பெற்றிருக்கும் சம்பளம் ₹30 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, இந்திய திரையுலகில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் மிக அதிகமான தொகையாகும். இதனால், அதிக சம்பளத்தில் ஒப்பந்தமாகியுள்ள முன்னணி நடிகை என்ற புதிய சாதனையை பெற்றுள்ளார் பிரியங்கா.
இதே படத்தில் ஹீரோவாக நடிக்கும் மகேஷ் பாபு, சம்பளத்தை தவிர்த்து படத்தின் மொத்த வருவாயில் 20 சதவீத பங்கு பெறுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், தயாரிப்பாளராக “ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ்” நிறுவனம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதை விட இன்னொரு சுவாரஸ்ய தகவல், இயக்குநர் ராஜமௌலி கடந்த RRR படத்திற்காக ₹200 கோடி சம்பளம் பெற்றிருந்தாலும், இப்போது அவரது சம்பளமாக எதுவும் நிர்ணயிக்காமல், இப்படத்திற்கும் வருவாய் பங்கீட்டை தேர்வு செய்துள்ளார். இது மிகப்பெரிய பொருளாதார ஒழுங்குமுறை மாற்றம் என திரையுலகத்தில் சொல்லப்படுகிறது.
பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றார். ‘சிட்டாடெல்’ மற்றும் ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதனுடன் ‘தி ப்ளஃப்’, ‘ஜட்ஜ்மென்ட் டே’ உள்ளிட்ட படங்கள் இவரது வரிசையில் உள்ளன.