சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில், எதிர்மறை கதாபாத்திரமான கல்யாணியாக நடித்த ரச்சிதா ராம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். தனது முதல் தமிழ் படமாவதால், புதிய மொழியும், புதிய பாணியும் என சவால்களை சந்தித்தாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியபடி நடித்தது தான் வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் கல்யாணி கதாபாத்திரத்தை அன்புடன் ஏற்றுக்கொண்டிருப்பது தான் மிகப் பெரிய பரிசு எனவும் ரச்சிதா தெரிவித்தார்.

வில்லியாக நடிக்கத் தேர்வு செய்தது ஏன் என்று கேட்டபோது, “சீரியல்களில் நடிக்கும் போது ஹீரோயினாக இருந்தால் எப்போதும் அழுதுகொண்டே இருக்க வேண்டும். ஆனால் வில்லியாக இருந்தால் பிறரை அழ வைக்க முடியும். அது எனக்கு பிடித்திருந்தது. கதாபாத்திரம் சிறியது என்றாலும் க்ளிக்கானால் மக்கள் மறக்க மாட்டார்கள்” என்று பதிலளித்தார். தர்ஷன் தான் தன்னை கன்னடத்தில் அறிமுகம் செய்தார், தமிழில் வாய்ப்பு கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ் என்பதால் இருவரையும் என்றும் மறக்கமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது சிறுவயது கனவாக இருந்ததாகவும், அந்த ஆசை கூலி மூலம் நிறைவேறியது என்றும் ரச்சிதா கூறினார். ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜை சந்தித்தபோது அவர், “என் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொன்னார். சில மாதங்களில் கூலி படப்பிடிப்பு தொடங்கியதும் கல்யாணி கதாபாத்திரத்திற்காக தொடர்பு கொண்டனர். ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே சம்மதித்துவிட்டேன். அதற்கான முக்கிய காரணம் ரஜினி சார் தான்” என அவர் பெருமிதமாக தெரிவித்தார்.
கூலி படத்தில் கல்யாணி, தேவாவை விட அதிகம் பேசப்பட்டாலும், சமூக வலைதளங்களில் அதிகமாக பாராட்டப்பட்டவர் சைமன் என்கிறார். நாகார்ஜுனா நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதற்கிடையில், எட்டாவது நாளில் பட வசூல் குறைந்துவிட்டாலும், கல்யாணியாக ரச்சிதா ராம் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த படங்களிலும் வில்லியாக கலக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.