சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. பெரும்பாலான படப்பிடிப்புகள் கேரளா மற்றும் கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி திடீரென ஒரு வார கால பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியாகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையடுத்து சில ரசிகர்கள் இயக்குநர் நெல்சனை நோக்கி, “என்ன நெல்சன் சார் அடிக்கடி லீவு கொடுக்கறீங்க” என்று கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான கூலி படம் மிகப்பெரிய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால், இப்போது ரசிகர்கள் அனைவரும் ஜெயிலர் 2 படத்தின் மீது கண்கள் வைத்துள்ளனர்.
ரஜினிகாந்த் வழக்கமாகவே இமயமலைக்கு சென்று அங்கு தனிமையில் நேரத்தை கழிப்பது வழக்கம். இம்முறை அவர் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி, பின்னர் பத்ரிநாத் மற்றும் பாபா குகைக்கு செல்ல உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த படப்பிடிப்பு காலத்திலும் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைவெளிகள் எடுக்கப்படுகின்றன.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. 50 ஆண்டு சினிமா பயணத்தை நிறைவு செய்த ரஜினி, ஜெயிலர் 2 மூலம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய வெற்றியை தருவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.