மும்பை: பயோபிக் படத்தில் கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்கவில்லை. மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்களை யாரும் மறக்க முடியாது. இவர் தலைமையின் போது, அணியில் அறிமுகமான பல்வேறு வீரர்கள் கிரிக்கெட் உலகில் அசாத்திய சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை லவ் ரஞ்சனின் லவ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், பிரசென்ஜித் சாட்டர்ஜி ஆகியோர் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.