வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில், நடிகை ரவீனா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி, பரத் தலைமையிலான அணி மற்றும் தினேஷ் தலைமையிலான அணி என மும்முனை போட்டியாக தேர்தல் நிலவரம் உருவாகியுள்ளது. அதே நேரத்தில், நடிகை ஆர்த்தி மற்றும் அவரின் கணவர் கணேஷ்கர் இருவரும் சுயேச்சையாக தனித்து போட்டியிடுகிறார்கள்.

அனைத்து வேட்புமனுக்களும் கடந்த திங்கள் முதல் புதன் வரை தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிறகு நடந்த பரிசீலனையில், தினேஷ் அணியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரவீனாவின் மனு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதற்கான முக்கியக் காரணமாக, கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்து பைரவி’ தொடரில் கதாநாயகியாக ஒப்பந்தமாகிய பின்னர் விலகியதால், அவருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தடை காரணத்தைக் காட்டியே வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு, ரவீனாவை ஆதரிக்கும் தரப்பினரிடையே மிகுந்த அதிருப்தியையும், எதிர்ப்பையும் எழச்செய்துள்ளது. “இரண்டு கதாநாயகிகள் கதை என்று தெரிந்தவுடன் நான் பங்கு பெற விரும்பவில்லை” என ரவீனா முன்பே விளக்கமளித்திருந்தாலும், சங்க நிர்வாகம் தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கிறது.
இந்நிலையில், போட்டியிலிருந்து விலகிய போஸ் வெங்கட், நிரோஷாவுக்கு செயலாளர் பதவிக்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளார். இது தேர்தல் சமீபத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
சங்க தேர்தலின் முடிவுகள் சின்னத்திரை உலகத்தில் பல மாற்றங்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.