சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை பிரம்மாண்டமாக தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் பிற மொழி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பல ஆண்டுகளாகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது ரவி மோகனின் ஆசை. இப்போது தான் அதனை நிறைவேற்றியுள்ளார். விழாவில் அவருடன் நடித்த நடிகர்களும் “நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்ற வகையில் பேசி உற்சாகம் அளித்தனர்.

ஆனால், இதன் பின்னணியில் வேறு கதையும் உள்ளது. ரவி மோகன் தற்போது பல தனிப்பட்ட பிரச்சனைகள், சர்ச்சைகள், மற்றும் கடன் சுமைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் ஈசிஆர் பங்களா 10 மாதங்களாக இஎம்ஐ செலுத்தாததால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாகவும், சில தயாரிப்பு ஒப்பந்தங்களில் முன்பணம் வாங்கிய பின்னரும் படப்பிடிப்பு ஆரம்பிக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மூத்த பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் கூறியதாவது: “இது ரவி மோகனின் நீண்ட நாள் கனவு. கடினமான சூழ்நிலையில் கூட அவர் தன்னம்பிக்கையுடன் நிற்கிறார்” என தெரிவித்தார்.
விழாவில் உணர்ச்சி வசப்பட்ட தருணமும் நிகழ்ந்தது. ஜெயம் ரவியின் அம்மா மேடையில் வார்த்தையின்றி கண்கலங்கினார். அது மகிழ்ச்சி கண்ணீரா, வருத்த கண்ணீரா என்பது யாருக்கும் புரியவில்லை. மேலும் ரவி மோகனின் அண்ணனும் பல முறை கண்கலங்கியதை மக்கள் கவனித்தனர். ஆனால், அவரது தந்தை விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் பாக்யராஜ், ராஜ்கிரண், லிங்குசாமி போன்ற பலரும் தயாரிப்பாளராகி பின்னர் கடனில் சிக்கியுள்ளனர். அந்த அனுபவத்தை மனதில் கொண்டு தான் ரவி மோகன் தயாரிப்பாளர் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இயக்குனராகவும் வருவேன் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
எதுவாக இருந்தாலும், ரசிகர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அவருக்கு நல்லதே நடக்கட்டும் என்ற ஆசையோடு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தொடக்கம் ரவி மோகனின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.