விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படமான ‘தலைவன் தலைவி’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் பரோட்டா கடை நடத்தும் ஹீரோவும், அடுத்த ஊரைச் சேர்ந்த ஹீரோயினும் குடும்ப சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு காதலிக்கத் தொடங்குகின்றனர். ஆனால், இருவரின் குடும்பங்களும் ஜாதகம் மற்றும் பின்னணி காரணங்களால் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றன. இதற்கு எதிராக, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு சிறு சண்டைகள் காரணமாக பிரிவும், அதற்குப் பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பது கதை மையமாகிறது.

யோகி பாபு, செம்பன் வினோத், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், காதல் மற்றும் குடும்ப உறவுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. படம் பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை கண்ட மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும், விவாகரத்து பெற்ற ஒரு தம்பதியினர், படம் பார்த்த பிறகு மீண்டும் இணைந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.
கணவன் மனைவிக்குள் சண்டை, கோபம், அன்பு என இயல்பான உணர்வுகள் இருந்தாலும், பிரிவு ஒரு தீர்வாகாது என்ற செய்தியை படம் வலியுறுத்துகிறது. விஜய் சேதுபதி, இப்படத்தை இயக்கிய பாண்டிராஜ்க்கு நன்றியை வெளிப்படையாக தெரிவித்தார்.
பலரின் மனதை கவர்ந்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 22 முதல் வெளியாக உள்ளது.