கோவை: நெல்லையில் நடந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை, தமிழ் நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொலைக்கு சில சாதிய அமைப்புகள், இது ஆணவக் கொலை அல்ல என்றும், இரு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றும் கூறி அதை மறைக்க முயன்றனர். இதற்கு பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த சூழலில், சாதிய ஆதிக்க மனப்பான்மையால் சமகால இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி, பரிதாபங்கள் குழுவின் கோபி, சுதாகர், டிராவிட் செல்வம் உள்ளிட்டோர் ஒரு வீடியோ வெளியிட்டனர். சமத்துவம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை நகைச்சுவை கலந்து எடுத்துரைத்த இந்த வீடியோ பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதே நேரத்தில், இந்த வீடியோவுக்கு எதிர்ப்பும் ஏற்பட்டது. பலரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், வீடியோ நீக்கப்பட வேண்டும், குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் அளித்தனர். இந்த விவகாரம் மேலும் தீவிரமான நிலையில் திராவிட விடுதலைக் கழகம் இயக்குநர் கொளத்தூர் மணியின் தலைமையில், கோவை காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் மனு அளித்தது.
அதில், பரிதாபங்கள் குழுவை மிரட்டும்வர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோபி மற்றும் சுதாகருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சமூக விழிப்புணர்வை உருவாக்கியதற்காக, இவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பெரியார், அண்ணா விருதுகளைப் போல, “எம்.ஆர். ராதா விருது” வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.