சென்னை: கன்னட சினிமாவின் பெருமையாக மாறிய ரிஷப் ஷெட்டி, தற்போது இந்திய திரைப்பட உலகின் முக்கிய முகமாக விளங்குகிறார். ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ஏழு நாட்களிலேயே ரூ.450 கோடி வசூல் செய்து திரைத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன் வெற்றியால் ரிஷப் ஷெட்டியின் பெயர் IMDb தரவரிசை பட்டியலிலும் உயர்ந்துள்ளது.

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கடலோர கர்நாடகத்தின் புராண நம்பிக்கைகள், தெய்வக் கதைகள் மற்றும் இயற்கையோடு கலந்த கலாச்சாரத்தை மையமாகக் கொண்டது. ஈஸ்வரா பூந்தோட்டம் எனப்படும் பகுதியில் நடக்கும் போராட்டங்களையும் தெய்வத்தின் தலையீட்டையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்த கதை சொல்லும் விதம் ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான பாணியில் அமைந்துள்ளது. கதை, திரைக்கதை மற்றும் அவரது ஆழமான நடிப்பு ஆகியவை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.
இந்த படம் இந்தியாவின் பல மொழிகளில் வெளியிடப்பட்டு, அனைத்து பிராந்தியங்களிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஐஎம்டிபி வெளியிட்ட வாராந்திர பட்டியலில் ரிஷப் ஷெட்டி 75வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருடன் நடித்த ருக்மணி வசந்த் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம், வில்லன் வேடத்தில் நடித்த குல்ஷன் தேவையா 22வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இதன் மூலம், ‘காந்தாரா சாப்டர் 1’ படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய அளவில் பேசப்படும் திரைப்படமாக மாறியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப் இயற்கை காட்சிகளை அற்புதமாகப் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத், படத்தின் ஆன்மீகத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். ரிஷப் ஷெட்டி தனது இயக்கத்திலும் நடிப்பிலும் புராணம், நாட்டுப்புற நம்பிக்கை, உணர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்துள்ளார். ‘காந்தாரா சாப்டர் 1’ படம், கலாச்சாரம் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் ஒரு மாபெரும் கலைப்படைப்பாக பாராட்டப்படுகிறது.