பிரபாஸின் புதிய திரைப்படமான ‘ஸ்பிரிட்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை திருப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை ‘அனிமல்’ புகழ் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்குகிறார். ஆரம்பத்தில் திருப்திக்கு ரூ.4 கோடி சம்பளமாக பேசப்பட்டதாக தகவல் வந்திருந்தாலும், தற்போது அவருக்கு ரூ.6 கோடி வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது திருப்தி டிம்ரியின் திரைப்பட வாழ்க்கையில் இதுவரை பெற்ற மிக உயர்ந்த சம்பளமாகும்.

இது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் மூலமாகவே டோலிவுட்டில் தனது அறிமுகத்தை மேற்கொள்கிறார் திருப்தி. ஏற்கனவே பாலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் அவர், 9 வருடங்களுக்குப் பிறகு இப்படிப் பெரிய அளவிலான ஓப்பனிங் கிடைத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில், ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்தவர் தீபிகா படுகோன்தான். ஆனால், அவர் ரூ.20 கோடி சம்பளத்துடன் லாபத்தில் பங்கும், தினசரி வேலை நேர கட்டுப்பாடும் வைத்ததால், படக்குழு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, திருப்தி டிம்ரி களத்தில் வந்தார்.
இருப்பினும், தீபிகா படத்திலிருந்து விலகிய பிறகு, படத்தின் முக்கிய விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பேசியதாகவும், புதிய ஹீரோயினை பற்றியும் தவறாக விமர்சித்ததாகவும் பரவியது. இதற்கும் பதிலளித்த சந்தீப் வாங்கா ரெட்டி, “அடுத்த முறை என் படத்தின் முழுக் கதையையும் சொல்லுங்கள்” என்று நேரடியாக கூறியதன் மூலம் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பினார்.
அந்த ட்வீட் யாரை குறிக்கிறது என்பது தொடர்பாக, ரசிகர்கள் சிலர் தீபிகாவைச் சொல்கிறார் எனக் கூற, இன்னும் சிலர் கங்கனா ரனாவத்தைத்தான் குறித்திருப்பார் என தங்களுடைய ஊகங்களை வெளியிட்டனர். எனினும், கங்கனாவுக்கும் ‘ஸ்பிரிட்’ படத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாததால், அவரது பெயர் பின்னர் பேசப்படவில்லை.
சமீபத்தில் அனிமல் படத்தில் ஒரு குறுகிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திருப்தி, அந்த படத்தில் இடம்பெற்ற படுக்கையறை காட்சி காரணமாக விமர்சனங்களை சந்தித்திருந்தார். இருப்பினும், சந்தீப்பின் நட்பும் நம்பிக்கையும் திருப்தியின் மீது தொடர்ந்ததால், அவருக்கு ‘ஸ்பிரிட்’ வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறது. 9 மொழிகளில் வெளியிடப்பட உள்ள இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது திருப்தி டிம்ரிக்கு இந்திய திரையுலகில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்றும், இந்த படம் மூலம் அவரின் பெயர் தெற்கிந்தியாவில் தகுந்த இடத்தைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.